தகவல் தொழில்நுட்பமும், இணையமும் இன்று உலகை ஆட்சி செய்கின்றன. இவற்றின் துணை
கொண்டு அளப்பரிய பணிகளைச் செய்துவிடமுடியும் என்பதைப் பல ஆங்கில இணையதளங்கள்
உணர்த்துகின்றன.
இணையத்தின் உயரிய வீச்சினை, அறிவியல் அணுகுமுறையுடன் தமிழில்
பயன்படுத்துவோர் இல்லை என்று கூறும் நிலையே உள்ளது. தமிழில் கதை, கட்டுரை, கவிதை,
திரை விமர்சனம் ஆகியவற்றை இணையத்தில் எழுதுவோர் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.
இவர்களால் நுட்பியல் சார்ந்த தமிழ் விடயங்களைத் தரமுடியாது. தமிழில் தட்டச்சு
செய்யும் தட்டச்சர்கள் தமிழ்க் கணிமை அரங்கை நிரப்பி நிற்கிறார்கள்.
தமிழில்
அகரவரிசை முறையாக உள்ள இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடமுடியும். பத்தாண்டுகளைக்
கடந்த தமிழ் விக்கிப்பீடியாவிலும் முறையான தமிழ் அகரவரிசைப்படுத்தல் இல்லை. திறந்த
நிலையில் இருந்தால் கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் மென்பொருளை தொடர்ச்சியாக
விருத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதெனப் பெருமை பேசும் தமிழ் விக்கியர்கள்
இன்னமும் தமிழ் அகரவரிசைப்படுத்தலில் உள்ள குறைகளை நீக்கமுடியாதுள்ளார்கள்.
"ஜெயமோகன்", "ஸ்டாலின்" போன்ற சொற்களை செயமோகன், இசுடாலின் என்றவாறு எழுதும் தமிழ்
விக்கியர்கள், அகரவரிசைப்படுத்தலில் "ஜ" வரிசையை தமிழ் "ஞ" வரிசைக்கு முன்னதாகவே
வைத்துள்ளமை அவர்களது செயலியின் நிரலாக்கம் தமிழ்ச் சூழலிற்குத் தொலைவில்
உள்ளதையும், தமிழ் விக்கியர்களின் நுட்பியல் முன்னுரிமையின்மை மற்றும்
கவனக்குவிப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் விடயமாகும்.
தமிழ் சார்ந்த
நிறுவனங்கள், தமிழ்க் கணிமை அமைப்புகள் இன்னமும் முதல் தலைமுறை இணையதளங்களையே
வைத்துள்ளன. தேடுபொறிகளின் தேடுதலுக்குட்படாத .pdf கோப்புகளைக்
கொண்டு படம் காட்டிக்கொண்டிருப்போர் முழுமையான தேடுதலுக்குட்படும்
உள்ளடக்கங்களுக்கு மாறவேண்டிய காலம் என்பதை உணரவேண்டும்.
விருபா வளர் தமிழ் செயலி உருவாக்க முயற்சியினூடாகப் பெற்ற பத்தாண்டு அனுபவத்தோடு,
இன்றைய ஏற்றம் பெற்ற தகவல் தொழில்நுட்பத் துணையுடன் புதிய தமிழ்த் தரவுதளங்களை
அமைக்கும் முயற்சியில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், நூற்றொகைகள், ஆய்வடங்கல்கள்
போன்றவற்றை முற்றிலுமாக எண்ணிம நிலையில் தரும் இம்முயற்சியைத்
தொடங்கியுள்ளோம். இவ்வகையில் அச்சில் வெளியான கருவி / நோக்கு நூல்கள், குறித்த
நூலாசிரியர்களின் அனுமதியுடன் இங்கு இணைக்கப்படும்.
|