பல ஆண்டுகளாக அரிதின் முயன்று தேடியும் சிந்தாமணி நிகண்டு கிடைக்கப்பெறவில்லை. இலண்டன்வாழ் நண்பர் திரு சா. முத்து அவர்களின் உதவியால் அதன் நகல் ஒன்றை அங்கிருந்து பெற்றபோது பேருவகை கொண்டோம். திரு சா. முத்து அவர்களுக்கு எமது நன்றி.
137 ஆண்டுகளுக்குப்பின் சிந்தாமணி நிகண்டை மீண்டும் பதிப்பித்து வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நீண்ட காலமாகக் கிட்டாதிருந்த குறை இப்போது இப்பதிப்பால் நீங்குகிறது. முதல் பதிப்பிற்கும் இப்பதிப்பிற்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் உண்டு. பொருளடக்கம், பதிப்புரை ஆகியன இப்பதிப்பில் புதுவதாகச் சேர்க்கப் பட்டுள்ளன. முதல் பதிப்பில் காப்புச் செய்யுள், அவையடக்கச் செய்யுள், சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் சந்தி பிரிக்கப்பெறாமல் உள. இப்பதிப்பில் அவை அவ்வாறு சந்தி பிரிக்கப்பெறாமலும் படிப்பவர் களுக்கு எளிமையாக இருக்கும் பொருட்டு அச்செய்யுள்களின் கீழ்ச் சந்தி பிரித்தும் தரப்பட்டுள்ளன. நிகண்டுச் செய்யுள்கள் சந்தி பிரிக்கப்பெறாமல் ஒரு பக்கத்திலும் அதன் பின்புறம் அவற்றுக்கு உரையும் முதல் பதிப்பில் இடம்பெற்றிருந்தன. ஆனால், இப்பதிப்பில் ஒவ்வொரு நிகண்டுச் செய்யுளும் சந்தி பிரிக்கப்பெற்று அச்செய்யுளின் அடியிலேயே அதன் உரை அமைக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பின் இறுதியில் இந்நிகண்டில் பொருள் கூறப்பட்ட சொற்கள் அனைத்தும் பயன்பாட்டு எளிமை கருதி அகராதியாகத் தரப்பட்டுள்ளன. இவ்வகராதியில் 3088 சொற்களும் அவற்றுக்கு 3088 பொருள்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வகராதி இப்பதிப்பின் தனிச் சிறப்பு ஆகும்.
சிந்தாமணி நிகண்டானது மின்–அகராதி நிலையில் www.viruba.com/Nigandu/Nigandu.aspx?id=1 இணைய முகவரியில் இணைக்கப்பட்டுள்ளது.