தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வெங்கடேசன், இரா
பதிப்பகம் : இராசகுணா பதிப்பகம்
Telephone : 919444023182
விலை : 75.00
புத்தகப் பிரிவு : ஆராய்ச்சிக் கட்டுரைகள்
பக்கங்கள் : 136
ISBN : 9788192209531
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

தமிழ் நூல் பதிப்பு வரலாறு அல்லது தமிழ்ச் சமூக வரலாறு

தமிழ்ச் சூழலில் அண்மைக் காலமாகத் தமிழ் நூல்கள் அச்சான வரலாறுகளை எழுதுதல் பற்றிய அக்கறை மிகுந்துள்ளது. அச்சு நூல் உருவாக்கத்தைச் சமூகப் பின்புலத்தோடு இணைத்து நோக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவ்வாறு எழுதுகின்ற வரலாறுகள் மட்டுமே முழுமைபெற்றது என்கிற மதிப்பீடுகளும் மேலெழும்பி உள்ளன. பொதுவாக வரலாறுகள் எழுதுவதற்கு ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்வது இயல்பான ஒன்றாக இருந்தாலும் ஆவணங்களின் வரலாறுகளைப் பதிவுசெய்தல் பற்றிய ஓர்மை தமிழ்ச் சூழலில் அவ்வளவாக இல்லை. 
 
இலக்கிய வரலாற்றை எழுதுகிறவர்கள் இலக்கிய, இலக்கண உருவாக்கத்தின் காலம், ஆசிரியர் பற்றிய விவரணங்களை மட்டும் பதிவுசெய்வதும் அந்த இலக்கிய/இலக்கண நூல்கள் அச்சாக்கம் பெற்ற வரலாறுகளைப் பதிவுசெய்தல் பற்றி அக்கறைகொள்ளாது இருத்தலும் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து இருந்துவருகிறது.
 
இவ்வாறான சூழல் ஒருபுறமிருக்க, அச்சு ஊடக வருகைக்குப் பின்னர், தமிழில் அச்சான நூல்கள் பற்றிய விவரங்கள் முழுவதுமாக நம்மிடம் உள்ளனவா என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது.  அச்சு ஊடகத்தை நமக்கு அறிமுகப்படுத்திச் சென்ற கிறித்துவ மதப் பரப்புரையாளர்கள் அச்சு நூல் விவரண சேகரிப்பு பற்றிய அவசியத்தையும் நமக்கு உணர்த்திச் சென்றுள்ளனர். இவர்களுள், ஜான் மர்டாக் ( John Murdoch ) முன்னோடியாக இருந்து செயல்பட்டார். இவர் உருவாக்கிய தமிழ் நூல்களுக்கான அட்டவணையில் ( Classified catalogue of Tamil printed books : 1865 ) பல நூல்களின் பதிப்பாண்டு குறிக்கப்படவில்லை என்றாலும் அது அச்சு நூல்களின் அட்டவணை உருவாக்கத்தின் தொடக்க முயற்சியாக இருந்தது. இவருக்கு முன்னர்த் தமிழ்நூல் அட்டவணையை ஏரியல் ( Ariel ) என்பவர் தொகுத்ததாக வே.இரா.மாதவன் குறிப்பிடுகிறார். இவ்வட்டவணை இன்னும் சுவடி வடிவிலேயே இருப்பதாகவும் அவர் பதிவுசெய்திருக்கிறார். மேற்குறித்தவர்களின் முயற்சிகளின் தொடர்ச்சியாக ஜி.யு.போப், எல்.டி.பர்னெட் இருவரும் சேர்ந்து இவ்வகையான பணிகளைச் செய்தனர். இலண்டனிலுள்ள பொருட்காட்சியில் இருந்த தமிழ் நூல்களுக்கான அட்டவணையை இவர்கள் உருவாக்கினர். இவர்கள் உருவாக்கிய அட்டவணைகள் 1909, 1931 ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.
 
இவர்களின் பணியைத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தமிழில் அச்சான நூல்களின் விவரங்களைக் கொண்ட தமிழ்நூல் விவர அட்டவணைகள் 1961இல் தமிழ்ப் புலமையாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. அவற்றுள் 1867லிருந்து 1900 வரை அச்சான நூல்களின் விவரங்கள் பதிவுசெய்யப்பட்டன. பெரும்பான்மை நூல்களின் பதிப்பு வரலாறுகளை அறிவதற்குரிய ஆவணமாக இத்தொகுதிகள் விளங்குகின்றன. 1987 இல் கிரஹாம் ஷா தொகுத்த The South Asia and Burma Retrospective எனும் நூலைப் பிரிட்டீஷ் நூலகம் வெளியிட்டது. அதில் 1556 முதல் 1800 வரை அச்சான நூல்களின் விவரங்கள் உள்ளன. இதில் 266 தமிழ் நூல்கள் மேற்கண்ட காலப் பகுதியில் அச்சானதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. சில அரிய தமிழ் நூல்களின் அச்சு வரலாற்றை இத்தொகுப்பு நூலைக் கொண்டு அறிந்துகொள்ள முடிகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுள்ள இவ்வகை முயற்சிகளைத் தவிர தமிழில் அச்சான நூல்களின் விவரங்களைக் கொண்ட முழுமையான ஒரு அட்டவணை இல்லை. 
 
இத்தகைய பின்புலத்தில்தான் தமிழில் அச்சான நூல்களின் வரலாற்றை எழுதுதல் குறித்த அவசியத்தை உணர வேண்டியுள்ளது. இவ்வகை அவசியத்தின் ஒருபகுதியை நிறைவுசெய்யும் விதமாக இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அமையும் என நம்பலாம். தமிழில் அச்சான நூல்களின் வரலாற்றை அந்நூல்கள் அச்சாக்கத்தின் சமூகப் பின்புலத்தைக் கொண்டு இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. இன்று கிடைக்கப்பெறுகின்ற தரவுகளைக் கொண்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றை எழுதுவதற்கான சிறு பங்களிப்பை இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் வழங்கும் என்று நம்பலாம். இவ்வகையான பதிப்பு வரலாறுகள் வருங்காலத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
 
தொகுப்பில் உள்ள முதல் கட்டுரை சிலப்பதிகாரப் பதிப்பு வரலாறு பற்றியதாகும். தமிழ் இலக்கிய மரபில் புதிய, வடிவம்,பாடுபொருள் தன்மை யைக் கொண்ட முதல் இலக்கியமாகச் சிலப்பதிகாரம் உள்ளது. தமிழ்ச் சூழலில் வெகுவாக அறியப்பட்ட இந்நூலுக்கு இன்றுவரை உருவாக்கப் பட்டுள்ள பதிப்புகள் குறித்த விவாதத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது. தமிழ்ச்சூழலில் சில இலக்கியங்கள் குறித்துப் பேசிக் கொண்டாடிய அளவிற்கு அவற்றிற்கான அச்சுப் பதிப்புகளை உருவாக்குவதில் அக்கறை கொள்ளாது இருந்த நிலைமையை சிலப்பதிகாரப் பதிப்பு வரலாற்றின் வழி அறிய முடிகிறது. தமிழக அரசியல் இயக்கத்தின் கொண்டாட்டமும் தமிழ்ப் புலமையாளர்களின் ஆராதனையும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் மீது மிகுதியாக இருந்தது. எதிர்நிலையில் இந்தக் காப்பியத்திற்கான பதிப்பு வரலாறு சோகம் நிறைந்ததாக உள்ளது.  
 
சிலப்பதிகாரம் செவ்வியல் நூல்களுள் ஒன்றாக இன்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றளவும் தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்கு ஆய்வுப் பதிப்புகள் வெளிவரவில்லை என்ற கருத்து தமிழ்ச் சூழலில் பரவலாக நிலவிவருகிறது. உ.வே.சா. பதிப்பைப் போன்ற ஒரு சில பதிப்புகள் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்டன. அன்றைய நிலையில் அவர்களுக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அச்சுப் பதிப்புகளை உருவாக்கித் தந்தனர். இன்றைக்குத் தமிழியல் ஆய்வு பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்படும் புதிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் பழம் பிரதிகளைப் புதிய வடிவிலும் இன்றைக்குக் கிடைக்கப்பெறுகின்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டும் பதிப்புகளை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. செவ்விலக்கிய நூல் வரிசையில் ஒன்றாக உள்ள சிலப்பதிகாரப் பனுவலுக்குச் செம்மையானதொரு பதிப்பை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இத்தேவைக்கு இதுவரை வெளிவந்துள்ள சிலப்பதிகாரப் பதிப்புகளைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இத்தேவையை நிறைவுசெய்யும் வகையில் இந்த முதல் கட்டுரை அமைந்துள்ளது. 
 
தமிழ்ச் சூழலில் செயல்பட்ட கிறித்துவப் பணியாளர்கள் சிறு துண்டு பிரசுரங்கள்/நூல்கள் வழியாகக் கிறித்துவ மதப் பரப்புரைகளைச் செய்தனர். கிறித்துவ மதத்தை உள்ளூர்த் தன்மையாக்கம் செய்தல் எனும் நோக்கத்தில் மறைப் பணியாளர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் மக்கள் அன்றாடம் பேசும் வழக்கு மொழியில் இருந்தன. இவ்வகைச் செயல்பாட்டிற்கு எதிர்முகம் கொடுத்துக் கிறித்துவப் பரவலைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்ப் புலமையாளர்கள்(குறிப்பாகச் சைவப் புலமையாளர்கள்) செயல்பட்டனர். இவர்களின் செயல்பாடுகள் கிறித்துவ மறைப்பணியாளர்களின் செயல்பாடுகள்  போன்றே இருந்தன. இவ்வகைச் செயல்பாட்டின் ஒரு தன்மையாக வைதீக ஒழுக்கங்களைக் கொண்ட நூல்கள்/துண்டு பிரசுரங்களை அச்சாக்கம் செய்து இலவசமாக வெளியிடும் வழக்கத்தை அவர்கள் மேற்கொண்டனர். இவ்வகையான வழக்கத்திற்கிடை யில் சமயம் சார்ந்த ஒழுக்கங்களைக் கொண்ட ஆசாரக்கோவையை அச்சாக்கம் செய்யும் நிகழ்வும் நடந்தது. கிறித்துவமதப் பரப்புரைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அமைப்புகளுள் பாகனேரி தனவைசியர் சங்கமும் ஒன்று. இவ்வமைப்பு ஆசாரக்கோவை நூலை இலவசமாக அச்சிட்டு வழங்கிய சம்பவத்தை மேற்குறித்த பின்புலத்தில் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வகை நோக்கில் இந்நூலை அச்சிட்டு வெளியிட்ட வரலாற்றுப் பின்புலம் தொகுப்பில் உள்ள இரண்டாவது கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. 
 
தொகுப்பில் உள்ள மூன்றாவது கட்டுரை தொல்காப்பியம் பொருளதிகார இளம்பூரணர் உரைப் பகுதி அச்சான வரலாறு பற்றியதாகும். வாழ்ந்து வரலாறு படைத்துச் சென்ற சில ஆளுமைகளைத் தமிழ்ச் சூழலில் எளிதாக மறந்துவிடும் நிகழ்வு தொடர்ந்து இருந்துவருகிறது. அவ்வாறு மறந்துபோன ஆளுமைகளுள் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொல்காப்பியத்திற்கு முதல் அச்சுப் பதிப்பு(1847) உருவாக்கப்பட்டிருப்பினும் பொருளதிகராத் திற்கான இளம்பூரண உரைப் பிரதிக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அச்சுப் பதிப்பு உருவாக்கப்பட்டது. இப்பணியைச் செய்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. தொல்காப்பிய இளம்பூரணர் உரைக்கான அச்சுப் பதிப்பு உருவாக்கம் வ.உ.சி.யாலேயே நிறைவுற்றது. பொது வாழ்க்கையில் தீவிரமாகவும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் செயல்பட்ட வ.உ.சி. எனும் மனிதன் எப்படி அவற்றிலிருந்து மெல்ல விலகி பதிப்புலகில் செயல்பட்டார் என்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. 
 
தமிழ் நூல் பதிப்பு முறைமைகள் காலந்தோறும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவந்துள்ளன. ஒரு நூலைப் பதிப்பிக்கும் எந்தவொரு பதிப்பாளனிடமும் ஒரு நோக்கம் அல்லது தேவை இருக்கும். அவனிடம் இருக்கும் அந்த நோக்கம், தேவையைச் சார்ந்து அப்பதிப்பாசிரியன் பதிப்பிக்க எடுத்துக்கொள்ளும் நூல்களின் பதிப்பு முறைமைகள் அமைந்திருக்கும். இத்தன்மை இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பிக்கும் அறிஞர்களிடையே இருக்கின்ற ஒரு பொதுத் தன்மையாகும். அதேயளவில் தாம் பதிப்பிக்க எடுத்துக்கொள்ளும் நூலுக்கான நுகர்வோர்  யார் என்பதைப் பொருத்தும் பதிப்பு முறைமைகள் அமைந்திருக்கும். அதுவொருவகையில் வணிகம் சார்ந்த உத்தியாகும். இவ்வகை இயல்புகளைக் கடந்து சென்று எந்தப் பதிப்பாளனும் செயல்பட வாய்ப்பில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கணம் கற்பித்தல் மரபில் அச்சாக்கம் பெறத்தொடங்கிய தொல்காப்பியம் அந்நூற்றாண்டில் இளம்பூரணர் உரைப் பகுதியைத் தவிர அந்நூலுக்கு இருந்த ஏனைய அனைத்து உரைப் பகுதிகளும் அச்சாக்கம் செய்யப்பட்டு விட்டன. இலக்கணம் கற்பித்தல் மரபில் அச்சாக்கம் பெறத் தொடங்கிய தொல்காப்பியப் பதிப்புகள் பற்றியும் அதன்வழி வெளிப்படும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நூல் பதிப்பு முறைமைகள் குறித்தும் தொகுப்பில் உள்ள நான்காவது கட்டுரை விவாதிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சான தொல்காப்பியப் பதிப்புகள் பற்றிப் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் தமிழ்ச் சூழலில் சொல்லப்பட்டு வருகின்றன. இம்முரண்களுக்கு விடைகூறும் விதமாகவும் இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. 
 
அச்சு ஊடக வருகைக்குப் பின்னரே தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பொதுமையாக்கம் பெற்றன. உயர்சாதி புலமையாளர்களிடம் மட்டும் இருந்த தமிழ் வளங்கள் ஜனநாயகத் தன்மை பெற்றன. இந்நிகழ்வுகளுக்குப் பின்னர்த் தமிழ் இலக்கியங்களை பொது மக்களிடையே பரவுதல் எனும் நிகழ்வு இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நடைபெற்றன. வெகுசன மயப்படுத்துதலின் முக்கிய கூறாக யாப்புக் கட்டமைப்பைக் கொண்ட இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிய அமைப்பில் உருவாக்குதல் எனும் செயல்பாடு இருந்தது. இவ்வகைச் செயல்பாட்டில் மர்ரே இராஜம் நிறுவனம் முன்னணியில் இருந்து செயல்பட்டது. பல தமிழ் இலக்கண, இலக்கியங்கள் எளிய சந்தியமைப்பில் வெளிவர இந்நிறுவனம் காரணமாக இருந்தது. மர்ரே நிறுவன வெளியீட்டிற்கு முதன்மையாக இருந்து செயல்பட்டவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை. இந்நிறுவனத்தின் முதல் வெளியீடான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் முதலாயிரத்திற்குப் பதிப்பாசிரியராக இருந்து அவர் செயல்பட்டார்(1955). இவரின் மறைவிற்குப் பின்னர்ப் பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை போன்ற பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு நூல் வெளியீட்டுப் பணியை மர்ரே நிறுவனம் மேற்கொண்டது. தமிழ் இலக்கியங்களை எளிமைப்படுத்துதல் எனும் செயல்பாட்டில் மிகுதியாகச் சமய நூல் பதிப்பாசியர்கள் அக்கறை கொண்டு செயல்பட்டுள்ளனர். எளிமையாக்குதல் எனும் செயல்பாட்டின் பின்னணியில் சமயத்தைப் பொதுமையாக்குதல் எனும் உள்ளார்ந்த செயல்பாடு இருந்தது. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை எளிமையாக்குதல் எனும் வையாபுரிப்பிள்ளையின் செயல்பாட்டை மேற்குறித்த பின்புலத்திலேயே புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இது தொகுப்பில் உள்ள ஐந்தாவது கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. 
 
தொகுப்பில் உள்ள ஆறாவது கட்டுரை சாமிநாதையரின் பதிப்புலகச் செயல்பாடுகள் பற்றிய விவாதத்தை முன்வைக்கிறது. பொதுவாகச் சாமிநாதையரின் பதிப்புலகச் செயல்பாடுகளை ஒற்றைத் தன்மையில் மட்டுமே இதுவரை கட்டமைத்து வந்துள்ளனர். சங்க நூல்கள் பலவற்றைப் பதிப்பித்துத் தமிழ் இலக்கிய வளங்களை மீட்டெடுத்தார் என்பதாக மட்டுமே அக்கட்டமைப்பு இருந்துவருகிறது. சாமிநாதையரின் பதிப்புலகச் செயல்பாடுகள் என்பது அறிவார்ந்த நிலையில் இருந்தன என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பழம் நூல்களைப் பதிப்பித்தலின் அவசியத்தை அவர் பாடநூல் உருவாக்கப் பின்புலத்தில் உணர்ந்துகொண்ட விஷயத்தைச் சரியாக யாரும் சுட்டிக்காட்டவில்லை. இவற்றை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது. சமயப் பின்புலத்திலும் சமகாலத்தின் கல்வி நிறுவனப் பாடத்திட்டத்திலும் இருந்த நூல்களை மட்டும் அச்சிடுவதில் அக்கறை கொண்டு செயல்பட்ட அன்றைய தமிழ்ப் புலமையாளர்களுக்கு மத்தியில் சாமிநாதையரின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. 
 
உ.வே.சா.விற்கு முன்பும் சமகாலத்திலும் பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடியிலிருந்து மீட்டெடுத்தல் என்பது வணிகம் சார்ந்ததாக மட்டும் பெரும்பாலும் இருந்தது. சாமிநாதையரிடமும் இவ்வகைச் செயல்பாடுகள் இருந்தன. அவை எத்தன்மையில் இருந்தன?. சுவடியில் இருந்தவற்றை முழுவதுமாக மீட்டு முழு நூலாகக் கட்டமைத்த பின்னர் பாடநூலுக்கான பகுதியைப் பிரித்து எளிய அமைப்பில் வெளியிடுதல் என்பதாக அவரின் செயல்பாடு இருந்தது. இந்தச் செயல்பாடு பிற பதிப்பாசிரியர்களிடமிருந்து சாமிநாதையரை வேறுபடுத்திக் காட்டுகிறது. இவரின் பாடத்திட்ட நோக்கத்திலான நூல் பதிப்புச் செயல்பாடு பற்றிக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்திலும் வெளியிலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகச் சிந்துவெளி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இருந்தும் சிந்து வெளி குறித்த புதிர்களுக்கு இன்னும் விடைகாண முடியாத நிலை இருந்து வருகிறது. ஒரு நூற்றாண்டிற்கு மேல் நடந்துவரும் இத்துறை குறித்த முக்கியமான ஆய்வுகள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்துள்ளன என்பது நினைவுகொள்ள வேண்டிய ஒரு தகவலாகும். இத்துறையில் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இரு ஆய்வாளர்களின் ஆய்வுரைகள் முதன் முதலாகத் தமிழில் வெளிவந்துள்ளன. ஒன்று பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்ப்போலா எழுதியது; மற்றொன்று ஐராவதம் மகாதேவன் எழுதியது. 
 
சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளைப் பர்ப்போலா வாசிக்க முற்படுகிறார் மகாதேவன் விளக்க முற்படுகிறார். இது இருவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகும். சிந்துவெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளை இவ்விரு அறிஞர்களும் எவ்வாறு மதிப்பிடுகின்றனர்; குறியீடுகளை மதிப்பிடுவதற்கு அவர்கள் கைக்கொண்ட ஆய்வு அணுகுமுறை என்ன என்பதான தகவல்களைத் தமிழில் வெளிவந்துள்ள இரு பதிப்புகளை ஆதாரமாகக் கொண்டு ஏழாவது கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
 
இறுதியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய, சுதேச மாணவர்களின் மொழிக் கல்வி சார்ந்து மேற்கொள்ளப்பட்ட இலக்கண நூல்களின் பதிப்பாக்க வரலாற்றை விவாதிக்கும் கட்டுரை இடம்பெற்றுள்ளது.  
 
பல்வேறு சூழல்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிவரும் இச்சூழலில் இவ்வகை முயற்சிக்கு ஊக்கம் தந்து வழிகாட்டியாக இருந்தவர்களுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும்.
 
தமிழ் நூல்பதிப்பு வரலாற்றைப் புலமைத் தளத்திற்கும் வெகுசனத்தளத்திற்கும் ஒருசேரக் கொண்டுசெல்லும் மாபெரும் பணியைச் செய்தவர் பேராசிரியர் இ. சுந்தரமுர்த்தி அவர்கள்.
 
தமிழ் நூல்பதிப்பு வரலாறு குறித்துப் பல நிலைகளில் பேசுவதும் எழுதுவதுமான போக்கு இன்று தமிழ்ச் சூழலில் இருந்துவருகிறது. இது குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்னரே பேராசிரியர் பேச்சிலும் எழுத்திலும் பதிவுசெய்திருக்கிறார்.  தமிழறிஞர்கள் பலரும் போதிய அளவு கவனத்தைச் செலுத்தாத தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு பற்றி அக்கறையோடு பதிவு செய்தவர் அவர். பதிப்பு வரலாறு குறித்த பல தகவல்களைப் பல்வேறு சூழல்களில் உரையாடல்களின் மூலமாகப் புரியவைத்துப் பதிப்பு குறித்த எனது சிந்தனையை ஊக்கப்படுத்திவரும் பேராசிரியர்  இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கு முதலில் அன்போடு நன்றிகூறி மகிழ்கிறேன். 
 
தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு என்பது வெறும் நூல் பதிப்பு வரலாறு சார்ந்தது மட்டும் அல்ல; அதனுள் நூல் அச்சான சம காலத்தைய சமூக வரலாறும் உண்டு என்பதை எனக்குப் புரிய வைத்தவர் பேராசிரியர்          வீ. அரசு. தமிழ்ப் பதிப்பு வரலாற்றைத் தமிழ்ச் சமூக வரலாற்றோடு இணைத்துப் பார்க்கின்ற முறைமையைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையில் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் நான் புரிந்துகொண்டேன். இந்தப் புரிதலுக்கு அடிப்படை காரணமாக இருந்துவருகின்ற அத்துறையின் தலைவர் பேராசிரியர் வீ. அரசு அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றிகூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
 
தொகுப்பில் உள்ள சிந்துவெளி குறித்த ஆய்வுக்கட்டுரையை எழுதச் சொல்லி ஊக்கம் தந்தவர் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள். சிந்துவெளி ஆய்வு பற்றிய சில தகவல்களை மட்டும் கேள்விப்பட்டிருந்த என்னை அத்துறை குறித்த ஆய்வுரைகளை வாசிக்கச் சொல்லியது மட்டுமின்றி அத்துறையில் வெளிவந்துள்ள இரு ஆய்வுரைகளில் காணப்படும் அணுகுமுறைகள் குறித்து எழுதச் சொன்னவர் அவர். அறிமுகமில்லாத புதிய துறையை எனக்குச் சொல்லித்தந்து அறிமுகப்படுத்திய பேராசிரியருக்கு இந்நேரத்தில் நன்றிகூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 
 
ஆய்வு சார்ந்த செயல்கள், முயற்சிகள் அனைத்திற்கும் அவ்வப்போது ஆலோசனை கூறிவருபவர் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி அவர்கள். இவர் நூலிற்கு அணிந்துரை வழங்கியிருப்பது ஆய்வுப் பணியை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனது பேராசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்நூலைப் பற்றிச் சொன்னதும் பாராட்டி ஊக்கம் தந்து கருத்துரை வழங்கியவர் முனைவர் மு. முத்துவேலு அவர்கள். சட்டத் தமிழ், ஆட்சித் தமிழ்த் துறைகளில் புலமைபெற்று விளங்கும் இவர் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வாசித்து கருத்துரை வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைந்தது. இவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
26.11.2011 இரா. வெங்கடேசன்
சென்னை - 35

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan