தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புலமை சுமந்த புயல்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
மணிகண்டன், யv.y.manikandan@gmail.com
பதிப்பகம் : இராசகுணா பதிப்பகம்
Telephone : 919444023182
விலை : 30.00
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 32
ISBN : 9788192209500
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

யாப்பு இலக்கணம் மாறாத குறள் வெண்பா; ஆனாலும் பழையதை நினைவூட்டிப் ‘போலிப்’படாத, புதுமை வடிவங்கள்! வெண்பா யாப்பு ஒன்றேயெனினும் முத்தொள்ளாயிரம், நளவெண்பா, கவிமணியின் வெண்பா, வ.சுப.மா.வின் வெண்பா (கொடை விளக்கு) ஆகியவை தனித்தன்மை காட்டுவன. மணிகண்டனின் இந்நூலிலுள்ளனவும் அவ்வாறு தனித்தன்மை காட்டுவது, அவர்தம் புலமைக்குப் புடம் போட்ட சான்றாகிறது.

மொழிஞாயிறு பாவாணரை இவர் போற்றும் பாடல்கள், புதிய ஞானப்பால் பொழியும் ‘பதிகங்கள்’ போலவே மின்னுகின்றன. ‘துஞ்சும் தமிழருக்குத் தூய தமிழ்ப்பற்றை, நெஞ்சில் எழுப்பும் நெருப்பு’ அம்மட்டோ? ‘கூவும் தமிழ்க்குயில்; கொட்டும் தமிழருவி; மேவும் தனித்தமிழின் வேர்’!
 
‘உவமை சிலநூலில் ஊர்வலமாய்ச் செல்லுமாம்’ அழகு பொருந்தப் பாடுகிறார் மணிகண்டன். ‘வருவாய்க்கு நூல்எழுதி வாழாப்பா வாணர், திருநூல்கள் செந்தமிழ்க்குச் சீர்’ என்ற பா, குறிப்பிடற்பாலது. அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நூல் கூடச் சில படிகள் அளவிலும் விற்றில. இன்றோ ஆயிரம் ஆயிரமாய்த் தந்து, ஏங்கியிருந்து, அவர் நூல்களை வாங்கிப் பயில்கின்றனர். ‘நத்தம்போற் கேடும், உளதாகும் சாக்காடும்’ அவருடையன. இன்று வாழும்பொழுதே, தமிழன் செத்த சவத்தைவிடச் சீர்கெட்டலைகின்றான். அவர் காலத்தில், அரசு அவரைப் போதிய அளவு போற்றவில்லை; மக்கள் கண்டுகொள்ளவில்லை; அறிஞர்கள் ‘கிண்டல்’ பேசினர். ஆனால் என்ன நடந்தது? இன்று அவர் ‘செறுநரும் போற்றும் செல்வராக’, ‘மொழி ஞாயிறாக’ வானிடை விளங்கித் தோன்றுகிறார்.
 
வண்டமிழைச் சாய்க்கும் வடமொழியின் வாலாட்டம்
துண்டித்தார் வாழ்வில் துணிந்து.
 
அருந்தமிழ்ப் பாவாணர் ஆரியத்தின் வேரைக்
கருக்குகின்ற வெப்பக் கதிர்.
 
வண்டமிழில் பாவாணர் வார்ப்பெல்லாம் ஆரியத்தால்
மண்டிய நோய்க்கு மருந்து.
 
ஆரியமயமாக்கப்பட்ட தமிழ்த் தெய்வ வழிபாடுகளைத் தமிழ்வழிப்படுத்த வேண்டும். சமற்கிருதமயமாக்கப்பட்ட நம் தெய்வத் தமிழ்ப்பெயர்களை, ஊர்ப் பெயர்களை, மக்கட் பெயர்களை, கலைச் சொற்களை மீண்டும் முன்னைய தமிழ்ப் பெயர்களாக மீட்க வேண்டும். இசைக்கலை, நாட்டியக்கலை, சிற்பக்கலை, ஆகமக்கலை, பிற கலைகள்-வானியல், கணியம், அறிவியலடிப்படைகள் அனைத்தும் சமற்கிருதமயமாக்கப் பட்டுள்ளன. இவை யாவும் தமிழாக்கம் பெற வேண்டும். நாமும் சமற்கிருதமும் ஆங்கிலமும் கற்று, நம் அறிவுலகம், கலையுலகம் சார்ந்த சொத்துக்களை மீட்க வேண்டும். கவிஞர் மணிகண்டனைப் போலப் பாடிக் கொண்டிருக்கும்போதே, நம் உடைமைகளைத் தேடிக் கண்டு மீட்பதுதான், ‘மீட்போலைப் பாவாணர்க்கு’ நாம் செய்யும் மேன்மைமிகு நன்றியறிதலாகும். - தமிழண்ணல்
 
===========
 
செப்பலோசை
 
உள்ளத்து உணர்வுகளும் உயரிய சிந்தனைகளும் மொழியின் அழகுகளும் சங்கமிக்கப் பிறக்கும் கலைப்படைப்பு இலக்கியமாகிறது; கவிதையாகிறது. தமிழ்க்கவிதை என்னும் பேராறு காலங்காலமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக் கிறது. அது நம் மனங்களில் அமுத அலைகளைப் பாய்ச்சி நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.
 
தமிழ்க்கவிதைப்பெண் காலந்தோறும் புதுப்புது வடிவங்களைத் தனது ஆடரங்கமாகத் தேர்ந்து கொண்டிருக் கிறாள்; எத்தனையோ பாவங்களில் எத்தனையோ உணர்வுகளில் தன் குரலை இசைத்துக் கொண்டிருக்கிறாள். ஆம். வடிவம், பாடுபொருள், உத்தி முதலியவற்றில் காலந்தோறும் பழைமை போற்றியும் புதுப்புதுக் கோலங்கள் பூண்டும் தமிழ்க்கவிதை பொலிந்து திகழ்கிறது.
 
யாப்புவடிவக் கவிதை, யாப்பு வடிவங்களை மீறும் உரைக்கவிதை, பிறமொழி வடிவங்களைத் தழுவிப் பிறந்த கவிதை என இக்காலக் கவிதை பன்முகங்காட்டிப் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில்தான் ஈராயிரம் ஆண்டுத்தொன்மைவாய்ந்த தமிழ்க்கவிதை வடிவமாகிய குறள்வெண்பா வடிவத்தில் மலர்ந்த பாவாணர் குறித்த கவிதைத் தொகுதியாக இந்நூல் அமைகிறது.
 
===========
 
திருக்குறளால் தமிழுலகில் நன்கறியப்பட்ட வடிவம் குறள்வெண்பா வடிவம்; தொல்காப்பியரால் ‘குறுவெண்பாட்டு’ எனும் பெயரில் பேசப்பெற்ற வடிவம் குறள்வெண்பா வடிவம். குறுமையான வடிவமாகிய அதற்குள் ஒரு பிரபஞ்சத்தையே - பிரபஞ்சத்திற்கே - பேசிவிட முடியும் எனச் சாதித்துக் காட்டியவர் வள்ளுவப் பெருந்தகை. குறுமையான வடிவத்திற்கு நிரந்தரப் பெருமையை வழங்கியவர் வள்ளுவப் பேராசான்.
 
சீர்த்தி மிகப்பெற்ற அந்தச் சிறிய யாப்பு வடிவம் கால ஓட்டத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை. கவினார்ந்த அந்த யாப்புவடிவம் புலவர்களால், கவிஞர்களால் போற்றி ஆளப்பெறவில்லை. ஆண்ட சிலரும் அதன் அழகை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. வள்ளுவப் பெருந்தகை அறமுரைக்கப் பயன்படுத்தியதால் (இன்பம் உணர்த்தவும் பயன்படுத்தியது உள்ளத்தில் பலர்க்கும் உடனடியாகப் படுவதில்லை.) பின்னை யோரும், நீதிகூறவே அந்த வடிவத்தைப் பயன்படுத்திப் படைத்த நூல்கள், வடிவாலும் பொருளாலும் திருக்குறளின் நகல்களின் நகல்களாகித் திருக்குறட் பேரொளியின் முன் நிற்கச் சிறிதும் திறனின்றிச் சூரியன் முன் கூழாங்கற்களாகச் சுடர்குன்றி நின்றன.
 
குறள்வெண்பா வடிவில் தோன்றிய நூல்களை எண்ணிப் பார்க்கும்போது, ஒளவைக் குறள், திருவருட்பயன் ஆகிய இடைக்காலப் படைப்புகள் நம் மனக்கண் முன் தோன்றுகின்றன. திருவருட்பயனின் குறட்பாக்கள் வடிவநலம் வாய்ந்தவை; வனப்பு ஆர்ந்தவை.
 
இருபதாம் நூற்றாண்டில் புலமையாளர் பலரும் குறள்வெண்பா வடிவில் நூல்களைப் படைத்துள்ளபோதிலும் வெண்பா வீச்சை, கவித்துவ எழிலைத் தூக்கலாக நாம் கண்டு துய்க்கும்நிலை அருகியே அமைகிறது.
 
திரு.வி.க., சுத்தானந்த பாரதியார், சாமி. சிதம்பரனார், வ.சுப. மா., சொ. சிங்காரவேலன், மா.வேதாசலம் எனப் பல்லோரும் குறள்வெண்பா வடிவில் நூல்கள் படைத்துள்ளனர். பல்லோரின் படைப்புள்ளும் கவிஞர் தமிழ்ஒளி ‘மாதவி காவியம்’ நூலினிடையே படைத்துள்ள குறள்வெண்பாக்களும், அறிஞர் வ.சுப.மா.வின் குறள்வெண்பா வீச்சுகளும், என் பேராசிரியப் பெருந்தகை அறிஞர் இரா. இளவரசு அவர்களின் குறள் வெண்பாப் படைப்புகளும், நண்பர் ஆரூர் தமிழ்நாடனின் ‘ஈரோடு தந்த இடி’ எனும் நூலின் குறள்வெண்பாக்களும், எனது குறள் வெண்பாக் களும் தனித்துப் பேசத்தக்கவையாகத் திகழ்கின்றன. இதனை அறிஞருலகம் அவ்வப்போது குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறது.
 
===========
 
குறள் வெண்பா வடிவம், இலக்கணக்கண்கொண்டு நோக்குவார்க்கும் அருஞ்செய்திகளை வழங்கிக் கொண்டே யிருக்கிறது.
 
அறிஞர் பொற்கோ அவர்கள் வழங்கும் ஒரு குறிப்பு குறள்வெண்பா வடிவின் தொன்மையையும் மொழியின் தொன்மை நிலையையும் நமக்கு அங்கைநெல்லியாய் உணர்த்துகின்றது.
 
ஏழுசீர் கொண்ட குறள்வெண்பாவைப் போன்ற பாக்கள் தெலுங்கு மொழியிலும் கன்னட மொழியிலும் இப்பொழுதும் இருக்கின்றன. அதற்கு ‘ஏளெ’ என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஏளெ வடமொழிச் சார்பு கொண்ட யாப்பு அல்ல; முழுக்க முழுக்கத் திராவிட மொழிச்சார்பு கொண்ட யாப்பு. அதை மனதில் வைத்துப் பார்க்கும்போது திருக்குறள் தோன்றிய காலத்துக்கு மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பே குறள் வெண்பா வந்திருக்க வேண்டும். அந்தக் குறள்வெண்பா யாப்பு இருந்த காலத்தில் இந்தத் திராவிட மொழிகள், வளர்ந்த திராவிட மொழிகள் நான்கும் ஒன்றாக ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று கருதுவது பிழையாகாது. அப்படிக் கருதுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.
                    (புதிய நோக்கில் தமிழ்யாப்பு, ப.6)
குறள்வெண்பாவைக் ‘குறுவெண்பாட்டு’ எனச் சுட்டும் தொல்காப்பியம் குறுவெண்பாட்டின் அடிவரையறை பற்றிப் பேசாமல் ‘‘குறுவெண் பாட்டிற் களவேழ் சீரே’’ என ஏழுசீர் பற்றியே பேசுதல் இங்கு நினைக்கத்தக்கது. முழுமையான ஈரடிகளை இவ்வடிவம் பெறாததால் பிற்கால இலக்கணிகள் சிலர் ‘ஓரடி முக்கால்’ என இதனைத் துல்லியமாகக் குறித்ததும் உண்டு. வெண்பா ‘வன்பா’ எனவும் இலக்கண வரலாற்றில் சுட்டப் பட்டுள்ளது. வீரமாமுனிவர் வள்ளுவக் குறட்பாக்களில் எதுகைச் சொற்கள் இடம்பெற்றுள்ள தன்மை நோக்கிக் குறள்வெண்பா வடிவத்தை (வீ) முதலடி நாற்சீர், இரண்டாமடி முச்சீர் (வீவீ) முதலடி முச்சீர், இரண்டாமடி நாற்சீர் எனப் புதுமையாக வகைப்படுத்திய பார்வையும் வரலாற்றில் உண்டு. ‘நாள்’, ‘மலர்’ எனும் வாய்பாட் டால் ஈற்றுச்சீர் அமையப்பெறும் வெண்பாக்களே ‘உத்தமப் பகுதி’ உடையன எனத் தண்டபாணி சுவாமிகள் அறுவகை இலக்கணத்துள் தனித்துக் கூறியுள்ள செய்தியையும் வரலாற்றில் காணலாம். குறள்வெண்பா வடிவிலும் நேரிசை, இன்னிசை வகைமை கூறலாம் எனப் பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
 
குறள்வெண்பா வடிவம் தமிழ்க்கவிதை வரலாற்றில் தொன்மையும் தனித்தன்மையும் வாய்ந்த வடிவம்; தொடர்ந்து இலக்கணிகளின் பார்வைக்கும் இலக்கான வடிவம் என்பதை இச்செய்திகள் நமக்குக் காட்டிநிற்கின்றன.
===========
இருபத்தோராம் அகவையில் நான் படைத்த பாவாணர் குறித்த குறள்வெண்பாக்களின் தனித்தன்மையே, அறிஞர் வ.சுப.மா., இலக்கணப்புலவர் த. சரவணத் தமிழனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், சிலம்பொலி சு. செல்லப்பனார், அறிஞர் பொற்கோ, அறிஞர் இரா. இளவரசு, கவிஞரேறு ஈரோடு தமிழன்பனார் முதலான பெருந்தகைகளின் கடைக்கண் பார்வைக்கு உரியவனாக என்னை ஆக்கியது.
 
தமிழுணர்வாளர்களுக்கும், மரபுக்கவிதைச் சுவைஞர்களுக்கும், தமிழ்ச்சுவைஞர்களுக்கும், இந்நூல் இனிய விருந்தாகும் என்னும் நம்பிக்கையை இங்கே பதிவு செய்கிறேன். மேலும் இந்நூல் தரும் உந்துதலில் தமிழின் தொன்மையான சிறந்த யாப்புவடிவமான குறள்வெண்பா வடிவத்தைக் காலத்திற்கேற்ப இன்னுங் கவினுற ஆண்டு இளங்கவிக்குலம் அழகுசெய்ய வேண்டுமெனும் அவாவையும் இங்கே வேண்டுகோளாக்க விழைகிறேன்.
===========
அச்சுக்கலையில் ஆற்றல்காட்டும் என் அன்பிற்குரிய 
திரு. ம. இராசேந்திரன் பதிப்புக்கலையிலும் ஆற்றல்காட்ட முனைந்திருக்கும் இத்தருணத்தில் மொழிஞாயிறு குறித்த இந்நூலை நேர்த்தியுற வெளிக்கொணர்கின்றார். என் வாழ்த்துகளோடு பாவாணர் அன்பர்களின் வாழ்த்துகளும் அவருக்கு உரித்தாகும் என்பது என் நம்பிக்கை. அப்படைப்பு கடந்தகாலங்களில் தமிழுலகில் வலம்வரச் செய்தோருள் ஒருவரும் என் உடன்பிறவாச் சகோதரருமாகிய திரு. தி. நடராசன் அவர்களை இந்நூலின் இப்பதிப்பு மலர்கையில் அன்போடு நினைகின்றேன்.
ய. மணிகண்டன்
தமிழ் இலக்கியத்துறை
30-12-2011 சென்னைப் பல்கலைக்கழகம்

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan