உலகின் மிகவும் தொன்மையான வரலாறு கொண்ட நாடுகளைப் பட்டியலிட்டால் அவற்றில் இந்தியாவுக்குத் தனிச் சிறப்பானதொரு இடம் உண்டு. இன்றைக்கு மிகவும் முனனேறியதாக விளங்கும் மேற்கத்திய நாடுகளும்கூட இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பையும் அதன் தொன்மையையும் ஏற்றுக் கொள்கின்றன.
பண்டைய இந்தியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது வேதங்கள் எனப்படும் மதவியல் நூல்கள் ஆகும். இவை காலத் தோற்றம் அற்றவை என்று பொருள்படும் விதமாக அனாதியானவை என்று அழைக்கப்படுகின்றன. இவை இயற்றப்பட்ட காலத்தில் இருந்து வெகு காலம் வரை வெறும் வாய்வழிப் பாடல்களாகவே மனப்பாடம் செய்யப்பட்டு பல தலைமுறைகள் வரை பாதுகாக்கப்பட்டன.
இந்தியாவின் மதவியல் நம்பிக்கைகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணிகள் பலவற்றின் துவக்கத்தை வேதகாலத்தில் தான் நாம் தேட வேண்டியிருககும். எனவே, இத்தகைய பண்டைய காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கவும் அதன் வரலாற்றையும் சரிவரப் புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவியாக இருக்கும்.
வேதங்கள் அடிப்படையில் மதவியல் வழிபாட்டு நூல்களே ஆகும். அதனால் அன்றைய சமூகத்தின் இதர அம்சங்கள் பற்றிய தகவல்களைத் தேடி அவற்றைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் மட்டுமே அது குறித்த முழுமையான பார்வை கிடைக்கப் பெறும்.
இத்தகைய தேவையை எதிர்நோக்கும் ஒரு முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது குறித்துப பல நூல்கள் இருப்பினும் அவை பெரும்பாலும் தமிழ்மொழியில் கிடைப்பதில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கவும். வேத கால சமூகம் மற்றும் அவற்றின் பல்வேறு அம்சங்கள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை அளிக்கவும் இந்நூல் துணைபுரியும்.