முதலாம் கயவாகு காமினியின் காலத்தை கி.பி. 171 - 193 ஆகக்கொண்டு, பழந்தமிழ் வரலாற்றை ஒழுங்கு செய்வதை மறுத்து சிலம்பின் காலம் என்ற இந்நூல் கேள்வியெழுப்புகிறது.
கலிங்கத்துக் காரவேலனின் அத்திகும்பாக் கல்வெட்டை அடித்தளமாகக்கொண்டு, சிலம்பிற்கு முன்பிருந்த மூவேந்தரின் பின்புலத்தை ஆராய்ந்து அந்தக் காலத்து தக்கண, உத்தரப் பாதைகளை விவரித்து, செங்குட்டுவனின் வடசெலவு கண்ணகியின் பொருட்டா, அன்றி வேறொன்றா என்பதும் அலசப்படுகிறது. மகதத்தில் இருந்த சுங்க அரச குடியினரின் விரிவும், அவருக்குப்பின் வந்த கனவர் / கனகர் பற்றியும், அதே காலத்துச் சாதவா கன்னர் நிலையும், நூலுள் தெளிவாக அலசப்படுகின்றன. பெரும்பாலும் கி.மு 87 - 69 இல், இன்னும் கூர்ப்பாய் கி.மு 80 - 75 க்கு நடுவில், தன் நாட்டுப் பெரும்பகுதியை இழந்து ஆட்சி வலி குறைந்திருந்த இலம்போதர சதகர்ணி காலத்தில், மகத்துவக் கனவர் ஆட்சிக்குச் சற்றுமுன், செங்குட்டுவனின் வடசெலவு நடந்திருக்கலாம். அது உறுதியாகக் கி.பி 177 அருகில் அல்ல என்று நிறுவப்படுகிறது.