யுத்தத்தில் ஒரு காலைப் பறிகொடுத்தவர் இந்நூலாசிரியர் யோ.கர்ணன். யுத்தம் அவருடைய இளமைப் பருவத்தைத் தின்றுவிட்டது. அவருடைய கல்வியை, அவருடைய தொழில் வாய்ப்புகளை, அவருக்கான எதிர்காலத்தை என எல்லாவற்றையும் அது தின்று தீர்த்துள்ளது. இப்பொழுது கர்ணனின் முன்னே நிற்கது சவாலான எதிர்காலம் மட்டுமே. அவருடைய கடந்த காலத்ததின் நினைவுப் பரப்பு விசை கூரிய ஒரு காந்தத்தைப் போல அவரைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கிறது. விடுதலைக்கான போராட்டம் என்று ஆரம்பித்த செயற்பாடுகள், முடிவற்ற ஒரு யுத்தமாகி கர்ணனைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது. இப்பொழுது தமிழ் பேசும் இனங்கள் இல்ங்கையில் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருக்கின்றன. கர்ணன் இந்த நிலைமைகள் தொடர்பாக தன் அனுபவங்களை எழுதிறார், ஒரு சாட்சியாக, ஒரு பதிவாளனாக, ஒரு கதை சொல்லியாக.