ஒப்பந்தக் கூலிகளாய் மலேசிய மண்ணிற்குப் போன தமிழர்கள் சொல்லெணாத் துயரங்களைச் சுமந்து வாழ்ந்தனர். இருந்தபோதிலும் உயிரினும் உயர்வாய் சுமந்த தமிழையும் பண்பாட்டையும் பேணி வளர்த்தனர். அதைப் பல நிலையில் பதிவு செய்தும் வந்தனர். அதன் வெளிப்பாடே தமிழ் இலக்கியங்கள். தமிழன்னைக்குத் தன்னால் இயன்ற அணி செய்த
இவர்களின் இலக்கிய வரலாறு 130 ஆண்டுகளைக் கொண்டது. சிறுகதை, கட்டுரை, கவிதை என இயன்றவரைக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முன்நிற்கிறார்கள். இத்தொகுப்பில் மலேசியாவில் வாழும் முனைவர் ரெ.கார்த்திகேசு, முனைவர் நெடுமாறன், முனைவர் முல்லை ராமையா உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்த கட்டுரைகளைப் பத்துத் தலைப்பில் தந்துள்ளார்கள். இனி தமிழ் இலக்கிய வரலாறு குறித்து எழுதுவோர் கண்டிப்பாக இந்நூலையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது. மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பங்கு கொண்ட அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், பத்திரிகைகள் குறித்தும் விரிவாக தகவல்கள் தந்துள்ளார்கள். கடல்தாண்டியும் முத்திரை பதித்த தமிழர்களின் சாதனைகளைக் காட்டும் நூல்.
- - - பிப்ரவரி 2008 - - -