மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பு விரல்விட்டு எண்ணக்தக்கவைகளாகவே உள்ளன. அந்த விதத்தில் டாக்டர் டி.ஆர்.சுரேஷ் அவர்களின் 'முறிந்த மனங்கள்' என்ற மொழிபெயர்ப்பு நூல் தமிழ் உலகிற்கு புதிய முயற்சியாகவும் அமைந்துள்ளது.
மனச்சிதைவு பற்றிய இந்நூலின் மூலம் டாக்டர் விஜய் நாகசாமி எழுதிய ஆங்கில நூல் ஆகும். மூல நூல் ஆசிரியரும் மொழிபெயர்ப்பு ஆசிரியரும் மனநல மருத்துவர்கள் என்பது இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பம்சமாகும்.
உடல் நோய் போன்றதல்ல மனநோய். அந்நோயை முதலில் ஒரு நோயாகக் கருதி அதற்கான தொடர் சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும், நோயாளி குணமானபின்னும் அவரைத் தொடர்ந்து பேணுவதும், கண்காணிப்பதும் முக்கியமானது. இது குறித்த விழிப்புணர்வு இன்றுவரை சாதாரண மக்களுக்கு இல்லை. மனநலப் பாதிப்பும், மனநோயும் - பீடிக்கப்பட்ட நோயாளியை மட்டுமன்றி, அந்நோயைளியைக் கவனித்துக் கொள்கின்ற பேணுநர் மற்றும் குடும்பத்தவர்களையும் மனதளவில் பாதிக்கின்ற ஒன்றாகும். எனவே அவர்களுக்கும் தொடர்ந்த மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய முழுமையான தகவல்களைத் தரக் கூடியதாக இந்நூல் அமைகிறது.
மனச்சிதைவைப் பற்றி சில நோயாளிகளின் வாழ்க்கைமூலம் எடுத்து விளக்கியுள்ள முயற்சி, நோய் பற்றிய முழுமையான புரிதலை வாசகர்களுக்குத் தந்துள்ளது. அடுத்த நிலையில் மனச்சிதைவு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறையினையும், அச்சிகிச்சை நோயாளியிடம் ஏற்படுத்தும் பாதிப்பையும், நோயாளியை குடும்பத்தினர் எவ்வாறு கையாளவேண்டும் என்பது பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ளது. அத்தோடு நின்றுவிடாமல், மனச்சிதைவு நோயாளிகளுக்கு மறுவாழ்வு தரும் ஸ்கார்ஃப் (Scarf) தொண்டு நிறுவனம்பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளது.
இந்நூல் - ஒரு நோயாளியின் குடும்பத்தினருக்கு உதவும் கையேடாகவும், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாகவும், மனநலக் காப்பகங்கள்இல் பணிபுரிவோருக்கு உதவும் வழிகாட்டியாகவும், பொது வாசகனுக்கு அறிவூட்டும் களஞ்சியமாகவும் அமைந்துள்ளது.
இந்நூலின் மொழிநடை மூல நூலைப் படிக்கும் உணர்வையே தருகிறது. மொழிபெயர்ப்பு நூலுக்குரிய எந்தச் சிக்கலும் இல்லாமல் பழகு தமிழ் நடையில் ஆசிரியர் எழுதிச் சென்றுள்ளார். 'முறிந்த மனங்கள்' என்ற நூலின் தலைப்பே இந்நூலின் மொழிபெயர்ப்பை எடுத்துக் காட்டுகிறது.
நூலின் பிற்சேர்க்கையில் இடம்பெற்றுள்ள 'இளவயது மனச்சிதைவு' என்ற கட்டுரையில் கல்விச்சுமை காரணமாகவும், முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்ற பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் இளம் வயதினர் எப்படி மனச்சிதைவுக்கு உள்ளாகிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது.
இறுதியில் இடம்பெற்றுள்ள கலைச்சொல் அகராதியும் மன நலத் தொண்டு நிறுவனங்களின் முகவரிகளும் - தேவையான தொகுப்பு முயற்சியாகும். மொத்ததில் பின்னிணைப்புப் பகுதி முழுமையும் டாக்டர் டி.ஆர்.சுரேஷ் அவர்களின் கருதல் முயற்சியாக அமைந்து நூலிக்குச் சிறப்பு செய்துள்ளது.