சிறப்பான சிந்தனைகள்
கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் போக்குகளையும் விரிவாக அலசும் புத்தகம்.
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், போக்குகள் மீதான பார்வைகள், பிரதிபலிப்புக்கள் எனத் துணைத் தலைப்பிடப்பட்ட "தமிழ்க் கொடி 2006"ல் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. ஆண்டுப் புத்தகம் அல்லது "இயர் புக்" என்ற கருத்துருவம் பல ஆண்டு காலமாக ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழில் சில ஆண்டுகளாகத்தான் வடிவம் பெற்றிருக்கிறது. மலையாள மனோரமா இந்தப் புத்தகத்தை ஆண்டுதோறும் மிகவும் திறம்பட வெளியிடுகிறது. சி.அண்ணாமலை தொகுத்திருக்கும் "தமிழ்க்கொடி 2006" வெவ்வேறு தலைப்புக்களிலான கட்டுரைகளைக் கொண்டது. வழக்கமாக அட்டவணைகள், பட்டியல்கள் மூலம் பெறும் தகவல்களை இந்தக் கட்டுரைகளைப் படித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நூலில் சிறப்பாக அமைந்திருப்பது "தமிழ்கூறும் நல்லுலகு"பகுதி. கி.பி.அரவிந்தன்(பிரான்ஸ்), ஜமாலன்(வளைகுடா), வெ.முருகபூபதி(ஆஸ்திரேலியா), மணி மு.மணிவண்ணன்(அமெரிக்கா), றஞ்சி(சுவிஸ்), ஜெயந்தி சங்கர்(சிங்கப்பூர்), ரெ.கார்த்திகேசு(மலேசியா), வ.ந.கிரிதரன்(கனடா), துரைபடன்(ஈழம்) ஆகியோர் தொகுப்பு நூலின் முக்கியத்துவம் அறிந்து மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், தேவைப்பட்ட இடங்களில் புள்ளி விபரங்கள் தந்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் உள்ள ஆழமும், பாரபட்சமற்ற தன்மையும் இவர்கள் கட்டுரைகளுக்கு வலிமையூட்டுகின்றன.
ஓராண்டுச் சூழ்நிலையை நாம் இன்றைய யாதார்த்தத்தோடு பொருத்திப் பார்க்கத்தேவையான வரலாறும் தரப்பட்டுள்ளது. கட்டுரைகளாக உள்ளதொரு தொகுப்பு நூலில் கட்டுரையாளர்கள் தேர்வு, முக்கிய இடம் பெறுகிறது. ஒரு தொகுப்பு நூலிற்காக கட்டுரை எழுதுவது, வார-மாத இதழ்களுக்கு எழுதுவது போலன்று. மனதைத் தொடும் இக்கட்டுரைகள் தமிழ் இனத்துக்காக போராடுவதாகக் கூறுபவர்கள் கவனிக்க வேண்டிய பல பகுதிகளைத் தெரியப்படுத்துகின்றன.
"சமூகம்" என்ற பிரிவிலும் மிகச் சிறப்பான கட்டுரைகள் உள்ளன. செ.ச.செந்தில்நாதன் "உலகமயமாதல்" என்பது பற்றி நன்கு விரிவாகவே எழுதி ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்கிறார். எளிய பொதுமக்கள் எந்த அளவிற்கு தலைவர்களால் தவறான அணுகுமுறைக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள் என்ற உண்மையும் இதில் வெளிப்படுகிறது.
"நேர்காணல்" என்றொரு பகுதி இருக்கிறது. இதில் சு.ப.வீரபாண்டியன், காஞ்சனா தாமோதரன் ஆகியோரின் பதில்கள் சிந்திக்கத்தக்கவை. எல்லாருக்கும் குறைகள் இருக்கின்றன. வேண்டும் இன்னமும் வேண்டும் என்று கேட்கிறார்கள். காஞ்சனா தாமோதரன் ஒருவர்தான் சமூகத்திற்கு நாம் என்ன தருகிறோம், எப்படி உதவ முடியும் என்று நினைக்கிறார். சிறப்புக் கட்டுரைகளில் "சொற்களஞ்சியத்தில் பயன்படுத்த வேண்டிய ஆதாரம்" என்ற பொருள் பற்றி மொழியியல்-அகராதி நிபுணர் பா.ரா.சுப்பிரமணியன் எழுதியிருப்பது ஒரு தமிழ் வாசகனுக்கு எளிதில் கிட்டாத அறிவு. சமூகவியல், இன்றைய தமிழச்சமூகம், அரசியல் போக்குகள் குறித்த கட்டுரைகள் ஒரளவு தடம்படிந்த பாதையிலேயே செல்கின்றன. இன்று சில அடிப்படை அரூபச் சொற்கள் உறுதியான, சீரான பொருளில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைப் பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது (உதாரணம்:திராவிடம், மொழிப்பற்று, தேசியம் போன்றவை.)
இந்த நூலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், தொகுப்பாசிரியரின் பக்குவமான, விஷயபூர்வமான பார்வை. பல தனிக் கட்டுரைகளில் விவாதித்து மறுக்கக்கூடிவை. இருந்தாலும், ஒரு தொகுப்பில் அவை சிறப்பாக பொருந்திப் போய்விடுகின்றன. நூலின் தயாரிப்பில் தொகுப்பாசிரியர், நூல் அமைப்பாளர் இருவருமாக இணைந்து கண்களுக்குக் களைப்பூட்டாத வண்ணப் பக்கங்களை அமைத்திருக்கின்றனர். புகைப்படங்கள், தனி மேற்கோள் பகுதிகள், மிகவும் நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. மொத்தம் 40 கட்டுரைகள். இச்சிறு மதிப்புரையில் முழு நூலிற்கும் நியாயம் செய்ய முயல்வது மிகவும் கடினம். ஆனால் நூலின் உயர்ந்த தன்மையையும் முக்கியத்துவத்தையும் அழுத்தமாகவும் மனப்பூர்வமாகவும் கூறலாம். இந்த ஆண்டு வெளிவந்த சிந்தனைசார்ந்த கட்டுரை நூல்களில் சிறப்பிடம் பெறுவது "தமிழ்க்கொடி 2006".
- - - ஆகஸ்ட் 1, 2007 - - -