ஒரு படைப்பினை விமர்சனப் பார்வையில் நோக்குகையில் , அப்படைப்பு உருவான காலத்தையும், சூழலையும் உற்றுக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. பெண் படைப்பாளியான சி.மாதுமையின் பதினான்கு வயதிலிருந்து பத்தொன்பது வயது வரை நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பே "தூரத்து கோடை இடிகள்". ஆசிரியர் சி.மாதுமையின் எழுத்துக்களில் இலங்கைத் தமிழ் மணம் விரவியிருக்கின்றது. பெண்களின் அவலங்கள், சமூக சிக்கல்கள், உறவுகளின் உறுத்தல்கள், இனக்கலவரம், வெளிநாட்டு மோகம், காதல், இரட்டை வேடமிடும் ஆண்களின் மனப்போக்கு ஆகியவற்றை மையப்படுத்துகின்ற இப் படைப்புக்கள், அனுபவங்களைச் சித்தரித்துக் காட்டுபவையாக விளங்குகின்றது.
ஒவ்வொரு படைப்பின் முடிவிலும் குறியீடாக இயற்கையைப் பயன்படுத்தியிருக்கிறார். சிறுகதைக்கான கரு நன்கு கை வந்திருக்கிறது, எனினும் ஒரு அனுபவப் பதிவாகவே கடந்து செல்ல நேர்கிறது. ஆயினும் அவரது காலத்தை, சூழலை அப்படியே பிரதிபலித்துக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. ஒவ்வொரு படைப்பாளியும் தான் வாழ்ந்த காலத்தை பதிவு செய்வதுதான் படைப்பினை முழுமையாக புரிந்து கொள்ள உதவக் கூடும்.
எளிய நடையைக் கையாண்டுள்ளமை சிறப்பம்சமாகும். கூடுதலாக ஆழ்ந்த வாசிப்பும், அனுபவத்தேடலும், மாதுமையின் படைப்புகளைப் பட்டை தீட்டும் வைரங்களாக இருக்கும். வைரம் வைரத்தாலேயே ஒளி வீசும்.
- - - ஆகஸ்ட் 2006 - - -