புத்தகங்களை குழந்தைகள் கிழிக்கலாமே தவிர குழந்தைகளைப் புத்தகங்கள் கிழித்து விடக் கூடாது. அதுதான் எதிர்காலத்திற்கு நல்லது. தாய் தந்தை அன்பில்லாத குழந்தைகள், காப்பகத்தில் வளரும் பிள்ளைகள் உயிருடன் நடமாடும் எந்திரமாகவே வளரும். தொட்டிச் செடிகளாய் போன்சாய் மரங்களாய் நிறையப் பிள்ளைகள் வளர்கின்றன. அது தவறு. அந்தத் தவறு செய்வதால்தான் நிறைய தவறுகள் தொடர்கின்றன.
இன்றைய பெற்றோர்கள் ஒவ்வொருவரும் கவனிக் வேண்டிய மேற்கண்ட கருத்தைச் சொன்னது பெரிய உளவியல் அறிஞரோ தத்துவமேதையோ அல்ல அகவை 11 நிறைந்த கு.அ.தமிழ்மொழி என்ற சிறுமிதான் தனது ஆழமான கருத்தை நம்முன் வைக்கிறார்.
புதுவையைச் சேர்ந்த கு.அ.தமிழ்மொழி 6ம் வகுப்புப் படிக்கும் மாணவி, இந்தச் சின்ன இளம் அகவையில் துளிப்பா எழுதுவதில் சிறந்த கவிஞராய் தடம்பதித்துள்ளார். தமிழ்மொழி எழுதிய 660 துளிப்பாக்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து"சிறகின் கீழ் வானம்" என்ற துளிப்பா நூலாக வெளிவந்துள்ளது. இதில் உள்ள துளிப்பா ஒவ்வொன்றும் சமூகப் பார்வையையும் அழகியலையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
தன்னைப்போல குறைந்த அகவையில் சாதித்தவர்களின் பட்டியலைக் கொடுத்து அதில் தன்னையும் இணைத்துக்கொண்டு இந்நூல் வெளியிடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதே. கு.அ. தமிழ்மொழி பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப்போட்டி,ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு நிறையவே பரிசுகளையும் பெற்றதோடு 2003 ஆம் ஆண்டிற்கான ஜீவா விருதையும் பெற்றுள்ளார். இவரது தந்தையும் சிறந்த கவிஞருமான புதுவைத் தமிழ் நெஞ்சன் இவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். நாளைய வரலாற்றில் கு.அ.தமிழ்மொழியும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கையோடு நமது வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.
- - - மார்ச் 2007 - - -