நெல்லை பெயரைச் சொல்லும்போதே மண்வாசனையும், வீரமும், தாமிரபரணி நீர்ச் சுவையும் நினைவில் வந்தாடும். இத்தகைய சிறப்பு மிக்க நெல்லைச்சீமையின் பெருமைகளைப் பல துறைகளில் பட்டியலிட்டுத் தந்துள்ளார் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன்.
நெல்லை சமயங்களுக்கும், பல இனங்களுக்கும் பாலமமைத்துத் தந்த பூமி. பல மதங்களுக்குரிய இலக்கியங்கள் பலவும் இந்த பூமியில் விளைந்துள்ளன. இலக்கியத்திற்கும், கலாச்சார மேம்பாட்டிற்கும் நெல்லை தந்த கொடைகள் ஏராளம் என்பதை ஆசிரியர் தனக்கே உரிய பாணியில் கற்பனை கலக்காத கதையாகத் தந்துள்ளார்.
நெல்லை மக்களின் வாழ்வியலையும், நெல்லை பற்றிய பல இரகசியங்களையும் அற்புதமாகப் படம் பிடித்து தந்துள்ளார்.
நம் தேச விடுதலைப் போராட்டத்தின்போது பாடுபட்டு உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் வரலாறு கண்களில் நீரை உதிப்பவை.
அரசியல், இலக்கியம், ஆன்மிகம், கலாச்சாரம் என எந்தத்துறையின் வரலாற்றை எழுதினாலும் நெல்லை மண்ணிற்கு முக்கிய இடம் உண்டு என்பதை ஆய்வு நோக்கிலும், தரமான நாவல் நடையிலும் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி பாரட்டத்தக்கது.
வரலாற்று அறிஞர்களுக்கும், நெல்லையின் பெருமையை அறியத் துடிப்பவர்கும், நம் பெருமைகளை அவசியம் அறிந்துகொள்ள இளைஞர்களுக்கும் வழிகாட்டும் நூல்.
--- நவம்பர் 2005 ---