மகாகவி பாரதி சுமார் எட்டு மாத காலம் "விஜயா" என்கிற நாளிதளுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார்.இதுநாள்வரையில் அதன் பிரதிகள் நம் பார்வைக்கு கிடைக்காத நிலையில், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் வேகமான முயற்சியால் பிரான்சில் கிடைக்கப்பெற்று, அதன் மர்மம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இதழும் நான்கு பக்க அளவில் உள்ளன. அவற்றில் பாரதியின் முத்திரை வரிகள் நிறையக் கிடக்கின்றன. பாரதியின் பார்வை அதில் இந்தியாவோடு நின்றுவிடவில்லை. அயல்நாட்டில் இந்தியர் படும் அவதிகளுக்கு எதிர்ப்புக் குரலும் கொடுத்திருக்கிறார்.
மிக சுவாரஸ்யம் நிரம்பிய கட்டுரைகள் நிறைந்திருக்கின்றன.
படிக்கும்போது பெரிதும் ஆச்சரியப்படுத்துகின்ற அநாயாசமான வார்த்தைகளின் அணிவகுப்பு. பாரதியின் அபிமானிகள்தான் படிக்கவேண்டும் என்பதில்லை, சகலருக்குமான சிறந்த தொகுப்பு.
-- 2005.01.02 --