15
இதழ் - 00
*எழுத்தாளர்கள்* viruba அன்பாதவன் இந்திரா பார்த்தசாரதி இரா.முருகன் உலோ.செந்தமிழ்க்கோதை எஸ்.ஜெகதீசன் எஸ்ஸார்சி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி கவிதா கே.ஆர்.மணி சித்தன் சேரல் ஜெயசக்தி தமிழினி திருப்பூர் கிருஷ்ணன் தேவகோட்டை.வா.மூர்த்தி நரசய்யா நல்லைக் குமரன் நா.விச்வநாதன் நாகரத்தினம் கிருஷ்ணா நாகூர் ரூமி நிலா ரசிகன் பழமலய் பா.ரவிக்குமார் பிச்சினிக்காடு இளங்கோ பூ.அ.இரவீந்திரன் மட்டுவில் ஞானகுமாரன் மதியழகன் சுப்பையா மதுமிதா மீனா முத்து மாதுமை வே.சபாநாயகம் ஸ்ரீரஞ்சனி
விளம்பரம்
வீட்டில் உள்ளவர்களிடம் திட்டுவாங்காமல் நான் சாப்பிட்டதே இல்லை. திட்டு என்றால் அது திட்டாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. “இந்த புள்ளையப் பாருடீ, எப்டி சாப்டுது?” என்ற கொஞ்சலாக இருக்கலாம். ஆச்சரியமாக இருக்கலாம். சாபமாகக்கூட இருக்கலாம். நான் சாப்பிடும் முறை அப்படி. அப்படி என்ன வித்தியாசமாக சாப்பிடுவேன் என்று கேட்கத் தோன்றுகிறதா? வித்தியாசம்தான். அது சாப்பாட்டில் அல்ல. சாப்பிடும் முறையில். சோற்றில் சாம்பாரோடு ரசத்தையும் சேர்த்து ஊற்றிக் கலந்து கொள்வேன். மட்டன் குழம்பில் தயிர் அல்லது மோரை ஊற்றிக் கொள்வேன். தோசை, இட்லி, இடியாப்பம் வகையறாக்களை டீ தொட்டு சாப்பிடுவேன்... ஒரு தத்துவார்த்த அடிப்படையிலான சாப்பிடும் முறை அது என்று சொல்லலாம். எப்படி என்கிறீர்களா? ஒருமுறை என் நண்பன் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தேன். நான் சாப்பிடும் முறையைப் பார்த்த அவனது மகன்கள் என்னைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். நான் கருமமே கண்ணாயினாராக செயல்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்களின் ஆச்சரியத்தை நானறிவேன். அதைப்பற்றி எனக்கென்ன கவலை? ஆனால் அதைப் பார்த்த என் நண்பன் பொறுக்க முடியாமல் ஒன்று சொன்னான். “என்ன பார்க்கிறீர்கள்? இவன் இப்படித்தான். ஒரு மனிதனின் வயிற்றுக்குள் போன பிறகு உணவுக்கு என்னவெல்லாம் ஆகும் என்பதை ரூமி சாப்பிடும்போது வெளியிலேயே பார்த்துக் கொள்ளலாம்”” என்றான்! நான் சாப்பிடும் முறை பற்றி அதைவிடச் சிறந்த விமர்சனத்தை இதுவரை யாரும் சொல்லவில்லை! உண்மைதான், வித்தியாசங்கள் மறைந்து எல்லாம் ஒன்றாகும் அற்புதம் உள்ளே மட்டும்தான் நடக்க வேண்டுமா? அது வெளியிலேயே நடந்தால் என்ன? அதனால்தான் தத்துவார்த்த அடிப்படையிலான உண்ணல் என்று சொன்னேன். சரிதானே? சரி, இதையெல்லாம் இங்கே ஏன் சொல்கிறேன் என்றுதானே கேட்க வருகிறீர்கள்? சொல்கிறேன். சொல்லாமல் எங்கே போகப்போகிறேன். அதற்குத்தானே வந்திருக்கிறேன். நான் எழுதும் முறையும் நான் சாப்பிடும் முறை போன்றதுதான். நான் எழுதிய நாவல் ஒன்று நாவல் என்ற இலக்கணத்துக்குள் வரவே இல்லை என்று ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது சரியாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கென்ன கவலை? அது நாவலாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? படிப்பதற்குச் சுவையாக இருக்கிறதா இல்லையா? அதுதான் கேள்வி. அதற்கு பதில் ஆம், இருக்கிறது என்று வாசகர் மனம் சொல்லிவிட்டால் அது பிறவிப்பயன் அடைந்துவிட்டது! (அது பயனுள்ளதாக இருக்கிறதா, தரமானதாக இருக்கிறதா என்ற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். எனவே அதைப்பற்றியும் எனக்குக் கவலை இல்லை). ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னால் அதில் என்னால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாது. எனவே நான் ஒரு விஷயம் பற்றி எழுதினாலும், அதற்குள் பல விஷயம் வந்துவிடுவது தவிர்க்க முடியாமல் போனது. எதைப் பற்றி எழுதப்போகிறேன் என்று (எனக்கே) தெரியாமல் எழுதினால் என்ன? நானும் சாப்பிட்ட மாதிரி இருக்கும். உங்களுக்கும் பல்சுவை விருந்து படைத்த மாதிரி இருக்குமல்லவா? அதற்காகத்தான் இது. இனிமேல் ஒவ்வொரு இதழிலும் நான் எழுதுவேன். எதைப்பற்றியாவது. அந்த நேரத்தில் எது என் மனதைப் பற்றிக் கொள்கிறதோ அதைப் பற்றி. அது என்ன என்று இப்பொது எனக்குத் தெரியாது. அது திறந்த ரகசியமாக ஆகும் வரை நீங்களும் காத்திருங்களேன். நானும் காத்திருக்கிறேன்….. ஆர்வத்துடன்!